ரெய்டுக்கு பயப்படும் அதிமுக.. இரட்டை வேடம் போடும் திமுக.. உதயநிதி vs ஈபிஎஸ்
வருமானவரித்துறை சோதனைக்கு அஞ்சியே பாஜக உடன் கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி பின் வாங்கியிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் 48 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், அரசின் திட்டங்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் வைத்தால் கூட எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றும் மோடி, அமித் ஷா பெயர் வைத்தால் தான் அவர் ஏற்றுக் கொள்வார் என்றும் பேசினார். திமுக அரசின் சாதனைகளை பார்க்க முடியாமல் எதிர்க்கட்சியினர் கலங்கிப் போய் உள்ளதாகவும் உதயநிதி விமர்சித்தார்.
இதனிடையே ரெய்டை பார்த்து அதிமுகவுக்கு பயமில்லை என துணை முதல்வர் உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக மீதான விமர்சனம் தொடர்ந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்
பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகதான் முயற்சி செய்வதாகவும் ஈபிஎஸ் விமர்சித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோது GO BACK MODI என்று சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் WELCOME MODI என திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.